கலால் வரிகள், போக்குவரத்து வரிகள் மற்றும் பல வரிகள் இந்திய அரசாங்கங்திற்கு வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் உற்பத்தியின் மீது விதிக்கப்படுவது தான் கலால் வரி. பிப்ரவரி 24, 1944 ஆம் ஆண்டில் மத்திய கலால் மற்றும் உப்பு வரி சட்டம் உருவாக்கப்பட்டது. இது 1966 ஆம் ஆண்டில் 'மத்திய கலால் வரி சட்டம்' என பெயர் மாற்றப்பட்டது. நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் மத்திய கலால் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உணர்த்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள பொருட்கள் அதன் தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும்போது, அந்த பொருளின் தயாரிப்பாளரால் கலால் வரி செலுத்தப்படும். இதன் முழு வரலாற்றையும், இந்த தினத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மத்திய கலால் வரி தினம் : மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்தே உப்பு என்பது ஒரு முக்கியமான பொருளாக இருந்து வருகிறது. கலால் வரிகள், போக்குவரத்து வரிகள் மற்றும் பல வரிகள் இந்திய அரசாங்கங்திற்கு வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பொதுவாக உப்பு வரி வசூலிப்பதற்கான நிர்வாகக் கட்டுப்பாடு விஷயங்களில் சீரான தன்மை இல்லை. முந்தைய இந்திய மாநிலங்கள் மற்றும் பல மாகாணங்கள் அவற்றின் சொந்த நிர்வாக அமைப்பை கொண்டிருந்தன. மேலும் அவை வரி வசூல் முறையையும் வைத்திருந்தன.
1944 ஆம் ஆண்டு வரியை எளிதாக செலுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் இந்திய வரி முறை சீர்திருத்தப்பட்டது. மத்திய கலால் வரி மற்றும் உப்புச் சட்டம் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து சிறப்பு விதிகளைக் கொண்டு இந்த சட்டத்தை திருத்தியது. 1890 ஆம் ஆண்டின் பம்பாய் உப்புச் சட்டம், 1884 ஆம் ஆண்டின் மெட்ராஸ் உப்புச் சட்டம் மற்றும்1882 ஆம் ஆண்டின் இந்திய உப்புச் சட்டம் போன்ற உப்பு உற்பத்தி சட்டங்களையும், போக்குவரத்து தொடர்பான அனைத்து முந்தைய சட்டங்களையும் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டது.
இந்த மத்திய கலால் வரி தினமானது நம் இந்திய நாட்டிற்கு செலுத்த கூடிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய (CBIC) துறையின் பங்களிப்பையும், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அவர்களின் சேவைகளையும் கவுரவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. அதே போன்று இதில் பணிபுரியும் ஊழியர்களை அதிக நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்ய இந்த நாள் ஊக்குவிக்கிறது. 1944 ஆம் ஆண்டு முதல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகளின் அளவு வளர்ந்தன.