IND v IRE: `ஐயா இது டெஸ்ட் மேட்ச்சா, டி20 ய்யாங்கய்யா?' இழுவையான ஆட்டத்தைச் சிறப்பாக வென்ற இந்தியா!
"இதே மைதானாத்தில் ஒரு பயிற்சி போட்டியில் ஆடியிருக்கிறோம். ஆனாலும் இங்கிருக்கும் களச்சூழலை இன்னும் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. போட்டி கொஞ்சம் சவால்மிக்கதாகத்தான் இருக்கும்" என்றே ரோஹித் டாஸில் பேசியிருந்தார். கடைசியாக இதே மைதானத்தில் நடப்பு தொடரில் இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் மோதிய போட்டி நடந்திருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு 78 ரன்கள்தான் இலக்கு. அந்த சின்ன டார்கெட்டையே இழுத்து 17வது ஓவரில்தான் தென்னாப்பிரிக்கா வென்றது. பிட்ச் அந்தளவுக்கு மெதுவாக பௌலர்களுக்குச் சாதகமாக இருந்தது. பேட்டர்கள் ஷாட்கள் ஆடவும் பந்தைச் சரியாக கனெக்ட் செய்யவுமே தடுமாறியிருந்தனர். பேட்டிங் ஆடக் கடினமாக இருக்கும் பிட்ச்சை மனதில் வைத்துதான் இந்திய அணியின் லெவனும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. குல்தீப் யாதவ் அல்லது சஹால் என முழுநேர ஸ்பின்னர்களில் ஒருவர் கட்டாயம் லெவனில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லெவனில் அக்சர் படேல் இருந்தார். காரணம் அவர் ஒரு ஆல்ரவுண்டர். அவரின் மூலம் பேட்டிங் ஆர்டரை இன்னும் நீட்டிக்கலாம் என்பதுதான் இந்திய அணியின் திட்டம்.
ரோஹித் டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பிட்ச் எதிர்பார்த்தபடியே பேட்டர்களுக்குச் சிரமமாக இருந்தது. அயர்லாந்து தட்டுத்தடுமாறியது. 16 ஓவர்களில் 96 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இந்திய பௌலர்களும் மிரட்டியிருந்தனர். சிராஜ், அர்ஷ்தீப் சிங், பும்ரா மூவரும்தான் பவர்ப்ளேயில் ஓவர்களை வீசியிருந்தனர். பவர்ப்ளேயில் அயர்லாந்து அணி 26 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பால் ஸ்டிர்லிங், பால்பிர்னி என இருவரின் விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங்கே வீழ்த்தியிருந்தார்.
Team India"இந்த மாதிரியான பிட்ச்களில் ஒரே லெந்த்தில் பௌலர்கள் தொடர்ந்து வீசி விக்கெட் எடுக்க வேண்டும். அர்ஷ்தீப்பைத் தவிர எங்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாருமே டெஸ்ட் ஆடியிருக்கிறார்கள்" என ரோஹித் போட்டிக்குப் பிறகு பேசியிருந்தார்.
உண்மையிலேயே ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் செஷனை பார்ப்பது போன்றுதான் போட்டி இருந்தது. அதிரடியை விரும்பும் டி20 ரசிகர்களுக்கு இந்த விஷயமெல்லாம் செட் ஆகுமா, இந்த உலகக்கோப்பை ஹிட் ஆகுமா என்பதெல்லாம் பெரிய கேள்வியாகத் தொக்கி நிற்கிறது