'தோல்விகளே தொடக்கம்' வெற்றியாளர்களின் நம்பிக்கை மொழிகள்!


 வெற்றி கிடைக்கும் வரை போராடுங்கள்


 வெற்றி பெறும் வரை நாம் உழைக்க வேண்டும். களைப்படைந்ததும் நமது முயற்சிகளை நிறுத்தி விடக் கூடாது. மாறாக எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை விடாமல் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் வெற்றியை அடையும் ஒரே வழி. மாறாக, களைப்படைந்து விட்டோம் என்று நிறுத்தினால் நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியாது.


வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும் என்பது போல் வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் கடுமையாகப் போராட வேண்டும். முதல் முயற்சியில் தோல்வி அடைந்தால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இலக்கை அடையும் வரை முயற்சிக்க வேண்டும். உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எல்லா செயலிலும் வெற்றி தான்.


ஒரு செயலை செய்ய ஆரம்பித்துவிட்டு அதில் பாதி வெற்றி அடைந்துவிட்டு அவ்விஷயத்தைப் பாதியில் விட்டால் அச்செயல் முழுமைப் பெறாது. உதாரணமாக ஒரு பூனை ஆற்றைக் கடக்க முயற்சி செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். பாதி ஆற்றைக் கடந்து சோர்ந்து விட்டால் ஆற்றின் கரையை அடையாமல் ஆற்றிலேயே மூழ்க வேண்டியதுதான்.


ஒரு செயலை செய்யும் போதே நான் நிச்சயம் அதில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை வேண்டும். சிறந்த செயலாற்றலும் திட்டமிடலும் இருந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி எளிதில் யாருக்கும் கிடைக்காது. பல சோதனைகளைக் கடந்து தான் வெற்றி வசப்படும். நதி போல எப்போதும் உங்கள் இலக்கை நோக்கி ஓடுங்கள்.


வாழ்வில் வெற்றியடைய தொடர் முயற்சி வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் பல்பை உருவாக்கும் போது பலமுறை தோல்வியைத் தழுவினார். ஆனாலும் மீண்டும் மீண்டும் சிலந்தியைப் போல முயன்று வெற்றியும் கண்டார். அதனால் நாமும் நம் வெற்றியை நோக்கி வீறுநடைப் போடுவோம். தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக்கி வெற்றி வாகை சூடுவோம்.